ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்...
ஆரம்ப கட்ட கருத்துக் கணிப்புகளால் மக்களின் மனநிலையை தெளிவாகக் கூறமுடியவில்லை. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்த அ.இ.அ.தி.மு.க. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அணிக்கு சரிசமமான பலத்துடன் உருவெடுத்துள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சமாதான மற்றும் சலுகை நடவடிக்கைகளினால் அ.இ.அ.தி.மு.க. தான் இழந்த வாக்குகளை மீண்டும் பெற்றுள்ளது என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. சலுகைகள் மட்டுமே வாக்குகளைப் பெற்றுத் தந்து விடுமா? நான்கு ஆண்டுகள் நசுக்கிவிட்டு ஐந்தாவது ஆண்டில் சலுகைகள் கொடுத்தால் போதும் மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்ற தவறான முன்னுதாரணம் ஏற்படுவது சரியா? அது ஒரு புறம் இருக்கட்டும். அ.இ.அ.தி.மு.க. வுக்கு ஆதரவான இந்த மாற்றம் சலுகைகளினால் மட்டும் ஏற்பட்டதல்ல என்பதை உணர்ந்து கொள்ள கடந்த கால தேர்தல் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பது அவசியமாகிறது.
1980 நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆருக்குத் தோல்வியைத் தந்த மக்கள் ஆறு மாதங்களுக்குப் பின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆரை அரியணையில் ஏற்றி வைத்து அழகு பார்த்தார்கள் என்பது வரலாறு. அதை விட்டு விடலாம் ஏனென்றால் அங்கு எம்.ஜி.ஆர். என்ற தனிப் பெரும் சக்தி இருந்தது. ஆகையால் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து மட்டும் பார்ப்பது தான் இன்றைய சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.
1989 சட்டமன்றத் தேர்தல்.
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் 1989 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. இரண்டாக உடைந்து ஜெ.அணி, ஜா. அணி என தேர்தலைச் சந்த்தித்தது. முக்கியமாக இரட்டை இலைச் சின்னம் முடக்கப் பட்டது. சேவல் சின்னமும், இரட்டைப் புறா சின்னமும் அவர்களுக்கு வழங்கப் பட்டன. இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று 13 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடித்தது. இந்தத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. உடைந்ததும் இரட்டை இலை முடக்கப் பட்டதும் தான் தி.மு.க. வின் வெற்றிக்குக் காரணமாகச் சொல்லப்பட்டன. ஆக 1989ல் தனது சொந்த செல்வாக்கில் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கவில்லை என்பது கண்கூடு.
1991 சட்டமன்றத் தேர்தல்
நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. அ.இ.அ.தி.மு.க. மீண்டும் ஓர் அணியாக உருப் பெற்றது. இரட்டை இலை மீண்டும் சின்னமானது. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட ஜெயலலிதா தலைமையில் அ.இ.அ.தி.மு.க வரலாறு காணாத வெற்றியைப் பெற்றது. ஆக இந்தத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தன்னுடைய சொந்த செல்வாக்கில் ஆட்சியைப் பிடிக்கவில்லை என்பதும் கண்கூடு.
1996 சட்டமன்றத் தேர்தல்
நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. வளர்ப்பு மகன் திருமணம், ஜெ அரசின் ஆடம்பரங்கள்,
ஜெயலலிதாவின் ஆணவம், எதிர்ப்பவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை இவையெல்லாம் பர்கூரில் ஜெயலலிதாவையே தோற்கடித்தன. தி.மு.க- த.மா.கா. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிரான மக்களின் மன நிலையே வெற்றியை நிர்ணயித்ததால் இந்தத் தேர்தலிலும் தி.மு.க. சொந்த செல்வாக்கில் வென்றதாகக் கொள்ள முடியாது. இந்தத் தேர்தலில் எதிரணியின் வெற்றிக்குக் காரணமே ஜெ தான் என்று சொல்பவர்களும் உண்டு.
2001 சட்டமன்றத் தேர்தல்
மிகவும் முக்கியமான தேர்தல் இது. அடுக்கடுக்கான ஊழல் வழக்குகளில் சிக்கி ஜெயலலிதாவும் அவரது சகாக்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர். டான்சி மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகள் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறி ஆக்கிக் கொண்டிருந்தது. 1996 முதல் 2001 வரையிலான கலைஞரின் ஆட்சி மீது மக்களூக்கு பெரிய அதிருப்தியும் இருக்கவில்லை. இந்த நிலையில் தேர்தல் வருகிறது. தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. வெறும் கூட்டணி பலத்தால் மட்டுமே இது சாத்தியமாயிற்று என்பது சிலரது கருத்து.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் இதுவரை வாக்களித்ததாகத் தெரியவில்லை. 1989 திலும், 1996 ரிலும் தனது ஆதரவு வாக்குகளால் தி.மு.க ஆட்சியைப் பிடிக்கவில்லை. மாறாக அ.இ.அ.தி.மு.கவுக்கு எதிரான எதிர் ஓட்டுகளால் (negative votes) மட்டுமே ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால் இப்போது நடைபெற இருக்கும் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. வுக்கு எதிரான எதிர் ஓட்டுகள் (negative votes) கணிசமாக கிடைக்கும் வாய்ப்பு இல்லை. எனவே தன்னுடைய சொந்த செல்வாக்கை சோதித்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளது தி.மு.க. எந்தவித அலையும் இல்லாத சூழலில் அ.இ.அ.தி.மு.க. வை விடுத்து தி.மு.க. வை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க மக்களிடம் தயக்கமில்லை என்பதை தி.மு.க. நிரூபிக்க வேண்டியுள்ளது.
2001ல் கூட்டணி பலத்தால் தான் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்றது சொந்த செல்வாக்கால் அல்ல என்பதும் இந்த தேர்தலில் சோதனைக்கு உள்ளாகிறது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. வுக்கு ஆதரவாக இதுவரை மக்கள் வாக்களிக்கவில்லை என்பதே இந்தப் பதிவின் மையக் கருத்து. அதுவும் இந்த தேர்தலில் சோதனைக்கு உள்ளாகிறது.
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை" என்பதை மக்கள் மன்றத்தில் நிரூபிக்க வேண்டிய அவசியம் தி.மு.க. தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. பல கேள்விகளுக்கு மே 11ம் தேதி விடை கிடைக்கும்.


