என் ஜன்னலின் வழியே....
சனிக்கிழமை இரவு மணி11 ஐக் கடந்து விட்டது. நான் தமிழ் மணத்தில் மூழ்கிக் கிடக்கிறேன். இப்போதல்லாம் அனேகமாக தினமும் இப்படித்தான் ஆகிவிடுகிறது. வேலைகளை முடித்து தூங்கப் போவதற்கு முன் ஒரு எட்டு தமிழ் மணத்தை எட்டிப் பார்த்து விட்டு வந்து விடலாமா? என்று அமர்ந்தால் நேரம் போவதே தெரிவதில்லை.
சனிக்கிழமையும் அப்படித்தான், மணி11 ஐக் கடந்து விட்டது. நான் தமிழ் மணத்தில் மூழ்கிக் கிடக்கிறேன். நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை தானே அதி காலையில் எழுந்து என்ன ஆகப் போகிறது. எட்டு எட்டரை மணிக்கு சாவகாசமாக எழுந்தால் போதுமே. நேற்று படிக்கத் தவறிய பதிவுகளை இன்று எப்படியாவது படித்துவிடுவது என்ற முடிவுடன் வந்து அமர்ந்து அரை மணி நேரம் ஓடிவிட்டது. அந்த நேரம் பார்த்து,
"டாடி தூங்க வரலையா" என்று என் இளைய மகன் வந்து நிற்கிறான்.
"நீ போய் படுடா இதோ பத்து நிமிஷத்துல நான் வந்துர்ரேன்" என்கிறேன் சமாதானமாக.
"இப்படித்தான் சொல்லுவ அப்புறம் வரமாட்ட நீ இப்பவே வா" என்று அன்றாட நடப்பை சொல்கிறான்.
"கொஞ்சம் வேலை இருக்குடா கண்ணா முடிச்சுட்டு வந்துர்ரேன்" என்கிறேன் கெஞ்சலாக.
கணினித் திரையை பார்த்த படி "இது என்ன தமிழ் மணம் என்ன பண்ற இதுல" என்று அவனது கவனம் திசை மாற.
"உலகம் பூரா இருக்குற தமிழ் நண்பர்கள்கிட்ட இது மூலமா பேசலாம் எழுதலாம்" என்கிறேன் நான்.
"இதுல சேரணும்னா எவ்வளோ படிச்சிருக்கணும் டாடி யார் யார்ல்லாம் இதுல இருக்காங்க". என்கிறான் ஆவலாக.
"தமிழ் தெரிஞ்ஜா போதும்டா யாரு வேணா எழுதலாம். நிறைய பேரு இருக்காங்க நான் அத எப்படி சொல்றது" என்கிறேன் சற்று குழப்பமாக.
"என்னென்னல்லாம் எழுதுவாங்கன்னு சொல்லேன்" என்கிறான் அவனும் குழப்பமாக.
"அதெப்பத்தியெல்லாம் காலையில விளக்கமா உனக்கு சொல்றேன் நீ இப்ப போய்த் தூங்கு ஓகேயா" என்று சொன்னவுடன் தலையாட்டிவிட்டு நகரும் போது "சீக்கிரமா வந்துடு டாடி" என்று சொல்லிக் கொண்டே நடக்கிறான்.
நான் உடனே வரப் போவதில்லை என்று அவன் புரிந்து கொண்டது போல் தெரிகிறது.
கவனத்தை மீண்டும் வலைக்குள் செலுத்த படிப்பதும் பின்னூட்டமிடுவதுமாக நேரம் றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. கண்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிக்கவும் நன்றி சொல்லி பின்னூட்டத்தை முடித்து இருக்கையை விட்டு எழந்தேன்.
படுத்தவுடன் கண்களுக்குள் தமிழ் வந்து உட்கார்ந்து கொண்டது. படித்த பதிவுகளும் அடித்த பின்னூட்டங்களும் ஒரு முறை மீள் பார்வைக்கு வந்து சென்றன. அதோடு தொடர்ச்சியாக தமிழ் மணத்தைப் பற்றி காலையில் அவனுக்கு சொல்வதாகச் சொன்னதும் நினைவுக்கு வர என்ன சொல்வது என்று மனது அசை போடுகிறது. யார் யார் இருக்காங்கன்னு கேட்டானே யாருண்ணு சொல்றது. தூக்கம் வந்து கேள்விகளைக் கவ்விக் கொண்டது எப்போது என்று எனக்குத் தெரியாது.
பக்கத்து வீட்டுக் காரரின் பைக் கிளம்பும் சத்தத்தில் முழித்துக் கொண்டேன்.
சுவர்க் கடிகாரம் 9 தைத் தாண்டிக் கொண்டிருந்தது. தலையைத் திருப்பி பார்த்தால் இன்னும் யாரும் முழிக்கவில்லை. அம்மாவை அணைத்தபடி தூங்கும் சின்னவனைப் பார்த்தவுடன் அவன் கேள்வி நினைவுக்கு வந்தது.
அவனுக்கு நிச்சயமாகப் பதில் சொல்லியே ஆக வேண்டும். என்னைப் பார்த்தவுடன் அவன் கேட்கும் கேள்வி அதாகத் தான் இருக்கும். பதில் சொல்லும் வரை அவன் என்னை விடப் போவதில்லை.
யோசித்தபடியே ஜன்னலைத் திறந்தேன்.
பதிவின் வரிகள் அதிகமாகி விட்ட படியால் தொடரும் போட வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.
அடுத்த பதிவில் அவனுக்கு பதில் சொல்கிறேன்.



4 Comments:
வீட்லே கம்ப்யூட்டர் இருந்தால் இதுதான் பிரச்னை. நானெல்லாம் வீட்டுக்கு தாமதமாகப் போனாலும் ஏதோ ரொம்ப சீரியசாக வேலை செய்துட்டு வந்ததாகப் பீற்றிக் கொள்வேன்.
முடிந்தால் இந்த அத்தையின் பதிவுகள் பற்றிச் சொல்லவும். அவன் தோழியின் கவிதைகள் அரங்கேறிய விதம் பற்றியும் சொல்லவும் தம்பியாரே!
அக்கா,
அந்தக் கவிதைகள் அனைத்தையும் அவன் படித்து விட்டான். இணையத்தில் தமிழ் அவனுக்கு புதிய விசயம். அதனால் ஏற்பட்ட ஆர்வம்தான்.
குட்டி பாரதிக்கு வாழ்த்துக்கள். அவனையும் எழுதச் சொல்லவும், இந்த கோடை விடுமுறையில்!
வாழ்த்துக்களுக்கு குட்டி பாரதியின் நன்றி.
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home